ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன்? தல - தளபதி போல எப்போதும் தனக்கு பிரியமான வாடிக்கையாளர் கூட்டத்தை வைத்திருக்கும் இயங்குதளங்களாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இருக்கிறது.
ஸ்மார்ட்போனில் இவை வழங்கும் வசதிகளை பொருத்த வரை இரண்டு இயங்குதளங்களும் ஒரே மாதிரியான அம்சங்களையே வழங்குகின்றன. எனினும் சில அம்சங்கள் ஐபோனிற்கும், சில அம்சங்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாய் இருக்கிறது. அந்த வகையில் ஐபோன் இயங்குதளத்தில் மட்டும் செய்யக் கூடிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஏர்டிராப்:
ஐஓஎஸ் இயங்குதளத்தில் இருக்கும் தலைசிறந்த அம்சங்களில் இதுவும் ஒன்று. ஏர்டிராப் கொண்டு தகவல்களை மற்ற ஐபோன் வாடிக்கையாளர்களுடன் மிகவும் எளிமையாக பகிர்ந்து கொள்ள முடியும். பில்ட்-இன் சேவையாக கிடைக்கும் ஏர்டிராப் கொண்டு ஃபைல்கள், புகைப்படம் மற்றும் லின்க்களை மிகவும் எளிமையாக பகிர்ந்து கொள்ள முடியும். இத்துடன் ஐபோன்களில் இருந்து மேக் கணினிகளுக்கும் பகிர்ந்து கொள்ள முடியும்.
புளோட்வேர்:
ஆண்ட்ராய்டு போன்களை போல் இல்லாமல், ஆப்பிள் தனது சாதனங்களில் புளோட்வேர்களை குறைக்க முயற்சித்து வருகிறது. ஐஓஎஸ் 10 இயங்குதளத்தில் இதனை டிசேபிள் செய்யவோ அல்லது செயலிகளை மறைத்து வைக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
லைவ் போட்டோஸ்:
லைவ் போட்டோஸ் அம்சம் புகைப்படத்தை நகரச் செய்து மேலும் அதற்கு உயிரூட்டுகிறது. இந்த அம்சத்தில் புகைப்படம் கிளிக் செய்யப்படும் முன்பும், பின்பும் படமாக்கப்படுகிறது. இந்த ஆப்ஷனை ஸ்கிரீனினை அழுத்திப் பிடித்து இயக்க முடியும்.
அதிவேக அப்டேட்கள்:
ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது ஐஓஎஸ் இயங்குதளத்திற்கான அப்டேட்கள் வேகமாக வழங்கப்படுகின்றன. ஆண்ட்ராய்டில் புதிய அப்டேட் பெற ஸ்மார்ட்போனினை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும் நிலையில், ஐஓஎஸ் இயங்குதளத்தில் அப்டேட்கள் சீராக வழங்கப்படுகிறது.
3டி டச்:
செயலிகளை திறந்து அதன் பின் அதனை மூடும் நேரத்தை குறைத்து பணிகளை நேரடியாக முடிக்க இந்த தொழில்நுட்பம் வழி செய்கிறது. இதனை செய்ய செயலி ஐகானை அழுத்தி பிடித்து, பின் திரையில் தோன்றும் ஆப்ஷனை தேர்வு செய்து பணி நிறைவேறும் வரை காத்திருக்க வேண்டும்.
ஃபேஸ்டைம்
நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வீடியோ சாட் செய்ய சிறப்பான செயலியாக ஃபேஸ்டைம் இருக்கிறது. பில்ட்-இன் அம்சமாக வழங்கப்படும் ஃபேஸ்டைம் சாதாரண அழைப்புகளை எளிமையாக வீடியோ கால்களாக மாற்ற வழி செய்கிறது. வைபை மற்றும் மொபைல் இண்டர்நெட் மூலம் வேலை செய்யும் ஃபேஸ்டைம் இணைப்பு வேகம் குறைந்தால் வீடியோ கால்களை தானாக ஆடியோ அழைப்புகளாக மாற்றி விடும்.
No comments: