லாக்கி என்ற பெயர் கொண்ட பணம் பறிக்கும் வைரஸ் மென்பொருள் இந்திய கம்யூட்டர்களைக் குறிவைத்துள்ளதாக இந்திய கம்யூட்டர் ஆய்வுக் குழு எச்சரித்துள்ளது.
உலகளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் லட்சக்கணக்கான கம்யூட்டர்களை கண்டமாக்கிய பணம் பறிக்கும் வைரஸ் மென்பொருள் வானாகிரை ரேன்சம்வேர் (Wannacry Ransomware). இதைப் போல லாக்கி என்ற பெயரில் ரேன்சம்வேர் இந்தியாவில் வேகமாக பரவி வருவதாக இந்திய கம்யூட்டர் ஆய்வுக் குழு (Indian Computer Emergency Response Team) எச்சரித்துள்ளது.
கம்யூட்டர்களில் உள்ள டேட்டாக்களை ஒன்றுவிடாமல் முற்றிலும் முடக்கும் சக்தி கொண்டது இந்த லாக்கி ரேன்சம்வேர். மின்னஞ்சல் வாயிலாகவே இந்தியாவில் அதிகமாக பரவிவருகிறது. முன்பின் தெரியாத முகவரியில் இருந்து வரும் மின்னஞ்சல்களை திறப்பதால் இந்த ரேன்சம்வேர் மென்பொருள் கம்யூட்டரில் டவுன்லோட் செய்யப்பட்டு தானாகவே நிறுவப்பட்டுவிடும்.
பின்னர், அனைத்து விதமாகவும் கம்யூட்டரின் செயல்பாடுகள் முடங்கிவிடும். ஃபைல்கள் எல்லாமே .lukitus அல்லது .diablo6 என்ற எக்ஸ்டென்ஷனில் மாறிவிடும். கம்யூட்டரை பழையபடி மீட்பதற்கு 0.5 முதல் 1 பிட்காய் செலுத்த வேண்டும். இதன் மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் வரை இருக்கும்.
தங்களுக்கு வரும் மின்னஞ்சலின் சப்ஜெக்ட் (Subject) வாக்கியத்தில் print, documents, photo, images, scans, pictures போன்ற ஆங்கில வார்த்தைகள் இருந்தால் அவற்றை திறக்காமல் அப்படியே டெலிட் செய்துவிடுவதே லாக்கி ரேன்சம்வேரை தவிர்க்கும் ஒரே வழி என்று பரிந்துரைக்கப்படுகிறது.
No comments: